ஒப்புதல்: உங்கள் பிள்ளைக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்குதல் (Consent: giving permission for your child to have treatment)
The Royal Children’s Hospital (RCH) எனும் குழந்தைகளுக்கான மருத்துவமனையில், உங்கள் குழந்தைக்குரிய அறிவார்ந்த முடிவுகளை எடுக்க உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் உங்களிடம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பின்வரும் தகவல்கள், ஒப்புதல் மற்றும் RCH-இல் நோயாளியின் சிகிச்சைக்கான சம்மதத்தை நாங்கள் எவ்வாறு பெறுகிறோம் என்பவற்றைப் பற்றிய அனைத்தையும் விளக்குகின்றன.
சுகாதாரப் பராமரிப்பில் 'ஒப்புதல்' என்றால் என்ன? (What is consent in healthcare?)
ஒப்புதல் என்பது ஒரு சுகாதாரப் பராமரிப்புச் சிகிச்சை, செயல்முறை, ஆலோசனை அல்லது பிற தலையீட்டை ஏற்றுக்கொள்வதற்கான முடிவாகும்.
ஒப்புதல் அளிப்பதற்கு முன் நான் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்? (What should I consider before giving consent?)
உங்கள் குழந்தையின் சிகிச்சைக்கு நீங்கள் சம்மதிப்பதென்பது, கேள்விகளைக் கேட்கவும் உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் அவற்றைப் பற்றிக் கலந்துரையாடவும் உங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு செயல்முறையின் அடிப்படையிலேயே இடம்பெறவேண்டும்.
ஒப்புதல் அளிப்பதற்கு முன் உங்கள் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரிடம் நீங்கள் கேட்கவேண்டுமென விரும்பும் ஐந்து கேள்விகளின் பட்டியலை Choosing Wisely Australia அமைப்பு வழங்கியுள்ளது.
நீங்கள் ஏதேனும் பரிசோதனை, சிகிச்சை அல்லது செயல்முறையை மேற்கொள்வதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் அல்லது பிற சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரிடம் கேட்கவேண்டிய 5 கேள்விகள் (Five questions to ask your doctor or other health care provider before you get any test, treatment or procedure)
1 எனக்கு நிச்சயம் இந்தப் பரிசோதனை அல்லது செயல்முறை தேவையா? (1. Do I really need this test or procedure?)
பிரச்சனையை இனங்காணுவதற்கு உங்களுக்கும் உங்கள் மருத்துவர் அல்லது பிற சுகாதாரப் பராமரிப்பு வழங்குநருக்கும் பரிசோதனைகள் உதவலாம். அதைக் குணப்படுத்துவதற்கு செயல்முறைகள் உதவலாம்.
2 எவ்வாறான ஆபத்துகள் உள்ளன? (2. What are the risks?)
பக்கவிளைவுகள் ஏற்படுமா? துல்லியமற்ற முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன? இது கூடுதல் பரிசோதனை அல்லது மற்றொரு செயல்முறைக்கு வழிவகுக்கக்கூடுமா?
3 எளிய, பாதுகாப்பான விருப்பத்தெரிவுகள் ஏதேனும் உள்ளனவா? (3. Are there simpler, safer options?)
சில நேரங்களில், நீங்கள் செய்ய வேண்டியது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அல்லது அதிக உடற்பயிற்சி செய்வது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வது மட்டுமே.
4 நான் எதுவும் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? (4. What happens if I don’t do anything?)
நீங்கள் உடனடியாகப் பரிசோதனை அல்லது செயல்முறையைச் செய்யவில்லை என்றால் உங்கள் நிலை மோசமடையுமா அல்லது மேம்படுமா என்று கேளுங்கள்.
5 செலவுகள் என்ன? (5. What are the costs?)
செலவுகள் என்பவை நிதி ரீதியானவையாகவோ, உணர்ச்சி ரீதியானவையாகவோ அல்லது உங்கள் நேரத்தைச் செலவிடுபவையாகவோ இருக்கலாம். சமூகத்திற்கு ஒரு செலவு ஏற்படும் என்றால், அந்தச் செலவு நியாயமானதா அல்லது அதைவிட மலிவானதொரு மாற்று உள்ளதா?
யார் என்னிடம் ஒப்புதல் அளிக்குமாறு கேட்பார்கள்? (Who will ask me to give consent?)
பெரும்பாலான சூழ்நிலைகளில், சிகிச்சை அளிக்கும் சுகாதார வழங்குநரே உங்கள் சம்மதத்தைக் கேட்கும் நபராக இருப்பார். அவர்கள் தகுந்த தகுதி பெற்றவர்கள், சிகிச்சையைப் பற்றிய போதுமான அறிவு உள்ளவர்கள் மற்றும் அதன் அபாயங்கள், நன்மைகள் மற்றும் ஏதேனும் மாற்று வழிகளைப் பற்றிய புரிதல் உள்ளவர்கள். பெரும்பாலும் ஒரு மருத்துவர்தான் உங்கள் சம்மதத்தைக் கேட்பார், ஆனால் எங்கள் ஏனைய ஊழியர்களில் சிலரும் உங்களது சம்மதத்தைக் கேட்கலாம்.
நான் எப்படி என் சம்மதத்தை வழங்கலாம்? (How can I give my consent?)
பின்வரும் வழிகளில் ஒப்புதல் வழங்கப்படலாம், அத்துடன் அது, வழங்கப்படும் சிகிச்சை அல்லது பரிசோதனையைப் பொறுத்தது:
- வாய்மொழி அல்லாதவை - எடுத்துக்காட்டாக, உங்கள் குழந்தையின் இரத்த அழுத்தத்தை ஒரு செவிலியர் அளவிடுவதற்கு ஏற்றவாறு உங்கள் குழந்தையின் கையை நீட்டிப் பிடித்தல்.
- வாய்மொழி ரீதியானவை - உங்கள் பிள்ளைக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்குகிறீர்கள் என்று கூறுதல்.
- எழுத்துபூர்வமானவை - உங்கள் பிள்ளை சிகிச்சையைப் பெற அனுமதி அளிக்கும் ஒரு ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுதல்.
எனது விருப்ப மொழியாக ஆங்கிலம் இல்லாவிட்டால் என்ன செய்வது? (What if English isn’t my preferred language?)
ஒப்புதல் செயல்முறையை நீங்கள் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய, மொழிபெயர்ப்பாளர் ஒருவரை எங்களால் ஏற்பாடுசெய்ய இயலும். RCH ஒப்புதல் படிவமானது பின்வரும் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: அரபு, சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியமானது), டாரி, டிங்கா, ஃபார்ஸி, ஹக்கா சின், கரேன், ஒரோமோ, பஞ்சாபி, சோமாலி, தமிழ், டிக்ரின்யா, துருக்கியம், உக்ரைனியன், உருது மற்றும் வியட்நாம்.
ஒப்புதல் பற்றிய கலந்துரையாடலில் உங்களுடன் கலந்துகொள்ள ஒரு ஆதரவாளரையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
நான் எப்போது ஒப்புதல் அளிக்கும்படி கேட்கப்படுவேன்? (When will I be asked to give consent?
முன்மொழியப்பட்ட சிகிச்சையானது சிக்கலானது, குறிப்பிடத்தக்க ஆபத்துகளைக் கொண்டது அல்லது இரத்தமாற்றத்தின் தேவையை உள்ளடக்கியதாக இருந்தால் எழுத்துபூர்வமான ஒப்புதல் தேவைப்படும். உங்கள் குழந்தையைத் தூங்க வைக்க வேண்டிய (மயக்க மருந்து கொடுத்து) செயல்முறைகளுக்கு எழுத்துபூர்வமான ஒப்புதல் எப்போதும் தேவைப்படும்.
ஒரு குறிப்பிட்ட செயல்முறைக்கு ஒப்புதல் தேவையாக இருக்கும் பட்சத்தில், திட்டமிடப்பட்ட செயல்முறைக்கு முன், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய மருத்துவச் சந்திப்பில் அல்லது வெளிநோயாளர் மதிப்பீட்டுச் சந்திப்பில் எழுத்துபூர்வமான ஒப்புதல் பெறப்படலாம். மருத்துவமனையில் சேர்க்கப்படும் நாளன்று, செயல்முறையைத் தொடர உங்களுக்கு சம்மதமா என்று உறுதிப்படுத்துவோம்.
அவசரகாலத்தில் என்ன நடக்கும்? (What happens in an emergency?)
அவசரகாலத்தில், நோயாளியின் உயிருக்கு, உடலிற்கு அல்லது மன ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீவிரமான மற்றும் உடனடி அச்சுறுத்தலைத் தடுக்க குறிப்பிட்ட சிகிச்சை அவசியம் என்று ஒரு சுகாதார வழங்குநர் நியாயமாகவும் நேர்மையாகவும் நம்பினால், ஒப்புதல் பெறாமல் சட்டபூர்வமாகத் தகுந்த செயல்முறையைத் தொடரலாம்.
யாரால் ஒப்புதல் அளிக்க முடியும்? (Who can give consent?)
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலரே (குழந்தைக்கான சட்ட உரிமைகள், பொறுப்புகள், கடமைகள், ஆற்றல் மற்றும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உள்ளவர்) ஒப்புதல் அளிக்கும்படி கேட்கப்படுவார். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகளாலும் ஒப்புதல் அளிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். ஆனால், அவ்வாறு செய்வதற்கான அவர்களின் ஆற்றல் என்பது அவர்களின் வயது, மற்றும் சிகிச்சையைப் பெறலாமா என்பதை முடிவெடுக்கும் திறனைப் பொறுத்தது. உங்கள் குழந்தையால் எந்த அளவிற்கு ஒப்புதலளிக்க முடியும் என்பது பற்றி உங்கள் சுகாதார வழங்குநர் உங்களுக்கு வழிகாட்டலாம்.
வளர்ப்புப் பராமரிப்பாளர்கள் (Foster carers) பொதுவாக சட்டபூர்வமான பெற்றோரின் பொறுப்பைக் கொண்டிருக்க மாட்டார்கள், எனவே குழந்தைகள் பாதுகாப்பு உத்தரவிற்கு (Child Protection Order) உட்பட்ட குழந்தைக்கு யார் ஒப்புதல் வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்த 'குழந்தைப் பாதுகாப்பை' (Child Protection) தொடர்பு கொள்ள வேண்டும்.
முன்மொழியப்பட்ட சிகிச்சையுடன் நான் உடன்படவில்லை என்றால் என்ன செய்வது? (What if I do not agree with the proposed treatment?)
நோயாளிகள்/குடும்பத்தினர் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையுடன் உடன்படாத சூழ்நிலையில், இந்த உடன்பாடின்மை என்பது குழந்தைக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தினால், சுகாதார வழங்குநர் நோயாளியின் நலனுக்காக சட்ட ஆலோசனையைப் பெறலாம்.
நான் என் மனதை மாற்றினால் என்ன நடக்கும்? (What happens if I change my mind?)
ஒப்புதல் அளித்த பிறகு எந்த நேரத்திலும் நீங்கள் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் உங்கள் மனதை மாற்றினால், உங்கள் ஒப்புதலை திரும்பப் பெற்றுக்கொண்டதை எழுத்துபூர்வமாகப் பதிவு செய்யும்படி நீங்கள் கேட்கப்படலாம்.
எனது உரிமைகள் எவை? (What are my rights?)
எந்தவொரு மருத்துவச் சிகிச்சைக்குமான அபாயங்கள் மற்றும் நன்மைகள் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க உங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் முடிவெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் பெறுவதற்கும், கேள்விகளைக் கேட்பதற்கும், அத்துடன் திருப்திகரமான பதில்களைப் பெறுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.
உங்களுக்கான எங்களின் உறுதிப்பாடு (Our commitment to you)
RCH-இல் உங்கள் குழந்தையின் சார்பாக நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகள் தொடர்பாகவும் நீங்கள் சௌகரியமாக உணரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் சம்மதத்தைக் கோரும் சுகாதார வழங்குநரிடம் அவற்றைக் கேளுங்கள். உங்களுக்குப் புரியவில்லையென்றால், எங்களிடம் மீண்டும் விளக்குமாறு கேட்பதோ அல்லது உங்களுக்குத் தேவைப்பட்டால் கூடுதலான நேரத்தை எடுத்துக்கொள்வதோ ஒருபோதும் பிரச்சினையில்லை.
மருத்துவ ஒப்புதல் பற்றிய கூடுதல் தகவல்களைப் பின்வரும் இணைப்புகளில் காணலாம்:
Last updated June 2023